வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Tuesday, August 02, 2011

ரயில் என்றாலே பயம்! - மனதை பாதித்த நிகழ்வு!

            வாழ்க்கையில் எவ்வளோவோ நிகழ்வுகள் நடந்திருக்கும். அவற்றுள் சில / பல நிகழ்வுகள் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது. அம்மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது. மனதை விட்டு நீங்க மறுக்கும் என்னை பாதித்த நிகழ்வு.

அன்று ஞாயிற்று கிழமை. 1996 ம் வருடத்தின் ஒரு காலை நேரம்.

"தாத்தா வீட்ல யார் யாரு இருக்காங்கனு பாத்திட்டு வா!"
"தாத்தா, பாட்டி (ஆயா - எங்கள் ஊர் வழக்கம்) ரெண்டுபேரும் இருக்காங்க மா"
"நீ இன்னொரு வாட்டி போய் பாத்திட்டு வா" 

என்னை வீட்டை விட்டு சிறிது நேரம் வெளியில் துரத்துவதிலே குறியாகவே இருந்தார் எனது அம்மா.

இதை புரிந்து கொண்ட நான் வேக வேகமாக சிறிது தொலைவில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு (அப்பாவின் அப்பா வீடு) ஓடிச்சென்று அரையும் குறையுமாக பார்த்துவிட்டு என் வீட்டுக்கு அதே வேகத்தோடு ஓடி வந்தேன்.

என்னை கவனித்து விட்ட அம்மா தன் கையில் இருந்த பேனாவையும் பேப்பரையும் மறைத்து உள்ளே எடுத்து கொண்டு போனார். நான் உறுதி செய்து விட்டேன். விபரீதம்!

பொறுமையாக எதுவும் தெரியாதது போல் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் பேப்பரை மடித்து அரிசி மூட்டையின் மேல் இருக்கும் முறத்தின் அடியில் மறைத்து வைத்தார். நான் எதையும் கவனிக்காதது போலவே இருந்தேன்.

"தம்பி குளிச்சிட்டு சட்டைய போடு. நாம ஊருக்கு போலாம்"
"எந்த ஊருக்கு?"
"சின்ன மாமா ஊருக்கு ஜேடர்பாளையம்"
"இன்னைக்கு எதுக்கு?"
"ஹே கிளம்புடா" - ஒரு சிறிய அதட்டல்.
"சரி"
"சீக்கிரம் குளி. நான் ஆயா வீட்டுக்கு (அம்மாவின் அம்மா வீடு) போயிட்டு வரேன்"  
"ம்ம்ம்ம்"

சிறிது தூரத்தில் இருக்கும் ஆயா வீட்டிற்கு கிளம்பினார் அம்மா.
(அம்மாவின் அம்மா, அப்பாவின் அம்மா இருவருக்கும் அதே ஊர்தான்)

நான் வேகமாக செயல்பட்டேன். அம்மா சென்றதை உறுதி படுத்தி கொண்டு முறத்தின் அடியில் இருக்கும் பேப்பரை எடுத்து படித்தேன்.

'நானும், பாலாஜி யும் வீட்டை விட்டு செல்கிறோம். எங்களை யாரும் தேடாதீர்கள். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை'
                                                                                                            
                                                                                                                      இப்படிக்கு
                                                                                                           பாப்பா (எ) சித்தேஸ்வரி

அப்படியே கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. பேப்பரை அங்கேயே வைத்து விட்டு குளித்து ரெடியானேன்.

 விஷயம் இதுதான்.

கடந்த ஒரு வார காலமாக எங்கள் வீட்டில் தீராத சண்டை அம்மாவிற்கும், அப்பாவிற்கும். எதனால் சண்டை என்றெல்லாம் தெரியாது. இம்முறை அதிகமாக  சண்டை போட்டார்கள். என் பனிரெண்டு வயதில் இது எனக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தது. இம்முறை தினமும் அடி உதை தான். என்னால் எதுவும் செய்ய முடியாது. நன்கு அழுவேன். அப்பாவை கண்டால் அவ்வளவு பயம். பல சமயங்களில் சண்டை போடும் போது அப்பா பிளான் பண்ணி என்னை வெளியே அனுப்பி விடுவார்.

"சைக்கிள் எடுத்துட்டு போய் இன்னும் நல்லா ஓட்டி பழகு"
"நான் ஓட்டல"
"போடான்னா போ.... அப்புறம் உனக்கும் உதை விழும்" - அந்த கத்தலில் வேறு வழியின்றி பயத்தில் செல்வேன்.

இதனால் எதற்காக சண்டை வருகிறது என்பதை ஊகிக்கவே முடியாது.
சண்டையைப்பற்றி யாரிடமும் சொல்லவும் மாட்டேன். என்மூலமாக வெளியே தெரிய வந்தது என்று தெரிந்ததால் அவ்வளவு தான். எனக்கு அடி உதை தான். வீட்டில் சண்டை என்பது சகஜம் தானே.

              அப்போதெல்லாம் பஸ் ஸ்டாப் க்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். (இப்போதும் தான்!!)

அப்பா வீட்டில் இல்லை. யாருமே பார்க்கவில்லை. வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி என் கையை பிடித்துக்கொண்டு நடந்தார் அம்மா. எனக்கோ மனதில் அழுகை. அம்மாவின் பேச்சை மீற முடியாது. எல்லா கடவுளையும் மனதில் கும்பிட்ட படியே நடந்து கொண்டிருந்தேன். அம்மா மனதிலேயே எல்லாத்தையும் அடக்கி கொண்டு வெளியில் காட்டாமல் இருந்தார்.

'யாரவது வழியில் பாத்து வீட்டுக்கு கூட்டிட்டு போய்டணும் கடவுளே'

ஈரோடு பஸ் ஏறி பஸ் நிலையத்தை அடைந்தோம். ஜேடர்பாளையம் பஸ் ஏறாமல் வேறு பஸ் ஏறினோம்.

"அம்மா! இந்த பஸ் ஜேடர்பாளையம் போகாதும்மா"
"சும்மா இருடா.... நான் போற பக்கம் வா"

ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்தோம்.
எனக்கு இப்போது புரிந்துவிட்டது.

இதுவரை ரயில்வே ஸ்டேஷன் போனது கிடையாது. விசாரித்து கொண்டு பிளாட்பாரம்  டிக்கெட் எடுத்துக்கொண்டு மேலே சென்றோம். அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்தோம். நேரம் பகல் பனிரெண்டு மணி இருக்கும்.

"ஏதாவது சாப்பிடறயா?"
"வேண்டாம்"
"உனக்கு கடலை மிட்டாய் பிடிக்கும் தானே. இரு வாங்கிட்டு வரேன்"

ஒரு பாக்கெட் வாங்கி வந்தார். இதுவரை வீட்டில் பாக்கெட்டாக வாங்கியது கிடையாது. இன்று தான் முதல் தடவை.
ரயில் தண்டவாளத்தின் வழியாக வந்து பிளாட்பாரம்ல் நிற்பதையும் செல்வதையும் பார்த்துக்கொண்டே ஒவ்வொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
அம்மா சேலை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தார். 

நான் முடிவு செய்துவிட்டேன். 

'இன்று தான் கடைசி நாள். எப்படியும் செத்து விடுவோம்.'

நம்பிக்கை சுத்தமாக இல்லை. எதுவானாலும் நடக்கட்டும்.

ரயில் நின்றவுடன் எல்லோரும் முன் வழியாக செல்லாமல் சில பேர் தண்டவாளத்தை வழியாக கடந்து செல்வதை அம்மா கவனித்திருந்தார்.

நேரம் சென்றது.

தூரத்தில் ரயில் வருவதை பார்த்த அம்மா,

"வா! நாம அந்த தண்டவாளத்தை தாண்டி அந்த பக்கம் போய்டலாம்"
"எதுக்கு?"
"வீட்டுக்கு போலாம் டா"
"இப்படியே போலாம் வா" - முன் வழியை காட்டினேன்.

ஹும்ஹும்

பிளாட்பாரம் விட்டு முன்னோக்கி சென்று சிறிது தூரம் சென்று தண்டவாளத்தை நோக்கி கையை பிடித்து கூட்டி சென்றார். தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றோம்.
அது தண்டவாளத்தை தாண்டி செல்ல கூடிய மக்கள் பயன் படுத்த கூடிய நடை பாதை தான்.
ரயில் என்ஜின் எங்களை தாண்டி சென்றது. இப்போது ரயில் பெட்டிகள் வந்தது.

"வாடா! போலாம்... செத்துடலாம் வா.... "

என் கையை பிடித்து இழுத்தார்.

நான் இப்போது கத்தலில் பிடித்து விட்டேன்.

"அம்மா.... வேண்டாம்மா.... வேண்டாம்....."

இரண்டு மூன்று தடவை என் கையை பிடித்து இழுக்க முயற்சித்தார்.
நான் விடவில்லை. அம்மாவின் கையை விடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டேன்.

ரயில் எங்களை கடந்தது. அங்கேயே உக்கார்ந்து அழ தொடங்கி விட்டேன். அழுகையில் மரண பயம் இருந்தது. அம்மாவும் அழுதார்.

எங்களை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
ஸ்டேஷனை விட்டு கொஞ்சம் முன்னாள் சென்று தண்டவாளத்தின் அருகே இருந்ததால் கவனிக்கவில்லை என்று நினைக்கறேன்.

"அம்மா... வீட்டுக்கு போலாம்மா... " - அழுதுகொண்டே சொல்லிக்கொண்டே இருந்தேன்.
"சரி... போலாம் வா"

ஒருவாறு வீட்டுக்கு திரும்பினோம்.
பஸ்சில் வரும்போது சொன்னார்.

"இத யார்கிட்டயும் சொல்லிடாதே"

நான் பதில் பேசவில்லை.
6 மணி வாக்கில் வீட்டிற்கு வந்தோம். நல்ல வேலையாக அப்பா இன்னும் வரவில்லை. 

உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக அம்மா எழுதிய லெட்டரை எடுத்து கிழித்து போட்டேன். அம்மாவிற்கு அப்போது என்மன வேதனை புரிந்திருக்கும். 

அழுதார்.....

அதன் பின் சில நாட்கள் நான் அம்மாவோடு பேசவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு அம்மா தனது தோழி ஒருவரிடம் இதை பற்றி சொல்லி இருக்கிறார்.

இருவரும் விளையாட்டாக என்னிடம் இதைப்பற்றி பேசினார்கள். சிரித்தார்கள்.

எனக்கு அழுகை தான் வந்தது. அழுதேன். அவர்களுக்கு புரிந்துவிட்டது.

அதன் பிறகு எப்போதுமே அதைப்பற்றி பேசவே இல்லை.

இதைப்பற்றி இன்று நினைத்தாலும் என் கைகள் நடுங்குகிறது.

இப்போது பலமுறை ரயில்களில் போய் வந்தாலும் ரயில் என்றாலே ஆழ்மனது நடுங்குகிறது!

6 comments:

நிகழ்காலத்தில்... said...

நடந்ததை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.,

இதிலிருந்து வெளிவரும் மனவலிமையை பெறுவீர்களாக...

ஷர்புதீன் said...

forgot the craps man! welcome to the world of happiness!

பாலாஜி said...

// நடந்ததை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.,

இதிலிருந்து வெளிவரும் மனவலிமையை பெறுவீர்களாக... //

அதிலிருந்தது மீண்டுவிட்டேன் நண்பரே!
ஆனால் எப்போது நினைத்தாலும் ஒரு பயம் வரும்.

பாலாஜி said...

@ ஷர்புதீன்

// forgot the craps man! welcome to the world of happiness! //

வருகைக்கு நன்றி! அதிலிருந்தது எப்போதோ மீண்டுவிட்டேன். இது ஒரு பகிர்வே!

ஆளுங்க (AALUNGA) said...

மிகவும் அருமையாக முற்கால அனுபவத்தை எழுதியுள்ளீர்கள்.
ரயிலில் அடிபட இருந்ததால் உங்களுக்கு ரயிலின் மேல் பயம்..
எனக்கோ மிதிவண்டியின் மேல்!

பாலாஜி said...

@ அருண்!

வருகைக்கு நன்றி!

// எனக்கோ மிதிவண்டியின் மேல்! //

என்னவென்று சொல்லலாமே!

Popular Posts