வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Friday, July 29, 2011

அரசினர் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை?

           அரசு பள்ளிகளில் குறிப்பாக கிராமங்களில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் தொழிற்கல்வி போன்ற படிப்புகளை படிக்க ஆசைப்படும் பொழுது அவர்களுக்கான வாய்ப்பு அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

அவர்கள் பெரும்பாலும் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களோடு போட்டியிட வேண்டியுள்ளது. இப்போட்டியில் வென்று முன்னேறுவது மெட்ரிக் மாணவர்களே!

பொறியியல் கல்லூரிகளை பொறுத்த வரையில் அரசு பொறியியற் கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டு காரணங்களுக்காக.

1 . படித்து முடித்த பின் நல்ல வேலை கிடைத்து விடும். ( சில பெற்றோர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளை பயில்வதை பெருமையாகவும் கருதுவதுண்டு )

2 . இங்கு கல்வி கட்டணம் தனியார் பொறியியல் கல்லூரிகளைக் காட்டிலும் மிக மிக மிக குறைவு.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி வாய்ப்புகள் குறைவாக கிடைக்கப்பெற்றவர்களே. அவர்களுக்கு தொழிற்கல்வி என்பது எட்டாக்கனிதான். அப்படியே நன்றாக படித்து தொழிற்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் பெரும் இடிதான். நன்றாக படிக்கும் பல மாணவர்களில் வெகு சிலருக்கே அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்து பெரும் சுமையாக உள்ள இந்த கல்வி கட்டணம் குறைந்து பயன் தருகிறது.


2001  ம் ஆண்டுக்கு முன்னாள் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு Rural Quota எனும் வாய்ப்பு வரப்பிரசாதமாக இருந்தது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்றாக ஊக்கப்படுத்தினார்கள். பல மாணவர்களும் தங்கள் குடும்ப பின்புலத்தையும் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பையும் யோசித்து நன்றாக படித்தார்கள். இதனால் அடுத்தடுத்த வருடங்களில் மாணவர் சேர்க்கை Rural Quota உள்ள பள்ளிகளில் அதிகரிக்க தொடங்கியது. மாணவர்கள் பல ஊர்களிலிருந்தும் அருகிலிருக்கும் பள்ளியை விட்டுவிட்டு அந்த குறிப்பிட்ட பள்ளியை நோக்கி படையெடுக்க துவங்கினர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை எடுத்து நல்ல முன்னேற்றத்தையும் காட்டினர்.

2001 ம் ஆண்டு என்ன காரணங்களுக்காகவோ Rural Quota கைவிடப்பட்டது. எனவே பல மாணவர்களும் அருகிலிருக்கும் பள்ளிக்கு மாறினர். பள்ளி பொலிவிழந்து பழைய நிலைக்கு திரும்பியது.

கிராமப்புற மாணவர்களுக்கான முதற்கதவு இங்கு அடைக்கப்பட்டதாகவே உணர்ந்தோம்.

( தொழிற்கல்வியில் அரசு கல்லூரிகளில் 80 % மாணவர்கள்  ஸ்டேட் போர்டு எனப்படும் மாநில பள்ளி கல்வி துறை வழி பயில்பவர்களையும், அதில் 25 % Rural Quota மூலமாகவும், 18 % மாணவர்கள் மெட்ரிக் வழி பயில்பவர்களையும், 2 % CBSE வழி பயில்பவர்களையும் நிரப்பவேண்டும் என்றிருந்ததது. இது முதலில் பொறியியல் கல்லூரிகளுக்கும் பின்னர் மருத்துவம் மற்றும் சட்டக்கல்லுரிகளுக்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது )


 அடுத்து பனிரெண்டாம் வகுப்புகளுக்கான Improvement. சில குறைகளை கொண்டிருந்தாலும் இதுவும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமகத்தான் இருந்தது. நல்ல வாய்ப்பு பள்ளிகளின் மூலம் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி பலர் பயன்பெற்றனர். Improvement மாணவர்கள் தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாய்ப்பை பறிக்கின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்தது. எனவே இதுவும் 2005 ம் ஆண்டு கைவிடப்பட்டது.

இரண்டாவது கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.

அடுத்து நுழைவுத்தேர்வு!

நுழைவுத்தேர்வை நீக்கியது கிராமப்புற மாணவர்களுக்கு பயன் தந்ததோ இல்லையோ! ஆனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நன்றாக வழிவிட்டது போல் ஆகிவிட்டது.

எப்படி?

தனியார் பள்ளிகளை பொறுத்த வரை அனைத்து மாணவர்களையும் எப்படியாவது அடித்து துவைத்து மனனம் செய்ய வைத்து நல்ல மதிப்பெண்களை எடுக்க வைத்து விடுகின்றனர். ஆனால் நுழைவுத்தேர்வின் மூலம் சில மாணவர்கள் வடிகட்டப்படுகின்றனர். கிராமப்புறங்களில் அடித்து துவைத்து மனனம் செய்ய வைத்து நல்ல மதிப்பெண்களை எடுக்க வைப்பது கொஞ்சம் கடினமே. பெரும்பாலும் நன்றாக படிப்பவர்கள் கொஞ்சம் அறிவாளிகள் தான். பள்ளி பொது தேர்வில் நன்றாக மதிப்பெண் எடுப்பவர்கள் நுழைவுத்தேர்வை வென்றுவிடுகின்றனர். 

கிராமப்புற மாணவர்கள் 190/200 எடுத்துவிட்டால் அவர்கள் பள்ளிகளிலும், அவர்களது ஊர்களிலும் சில வருடங்களுக்கு கொண்டாடப்படுவார்கள். உண்மையிலேயே அது அவ்வளவு கடினம். ஆனால் தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 200/200 எடுப்பது சாதாரண விசயமே. எனவே கிராமப்புற மாணவர்களுக்கான கதவை அடைத்து மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான கதவை திறந்து விட்டது போல் ஆகிவிட்டது.

கவனிக்கவும்!
இங்கு அடைக்கப்பட்டுவிட்டதாக சொன்ன மூன்று விஷயங்களுமே இருந்தால் கிராமப்புற மாணவர்கள் வென்று விட்டதாக அர்த்தம் இல்லை. இது தங்களை மெட்ரிக் பள்ளி மாணவர்களோடு போட்டியிடும் வாய்ப்பை மட்டுமே ஏற்படுத்திக்கொடுக்கும் காரணிகள். 

மேற்சொன்ன இம்மூன்று காரணிகளுள் Rural Quota வை மீண்டும் கொண்டுவந்தால் என்ன? 
நிச்சயம் கிராமப்புற மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்படலாமே!

எதோ ஒரு காரணத்திற்காக கொண்டு வரப்பட்ட ஜாதி அடிப்படையிலான முன்னுரிமை பற்பல ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இதே வேளையில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறேதும் இல்லை.

சமச்சீர் கல்வியை பற்றி பேசும் நாம் Rural Quota  வை பற்றியும் பேசலாமே!

2 comments:

Reverie said...

Rural Quota ஒரு வேலை ஓட்டாக மாறாதோ?
நல்ல பதிவு நண்பரே...

பாலாஜி said...

@ Reverie
// Rural Quota ஒரு வேலை ஓட்டாக மாறாதோ? //
அப்படி இல்லை நண்பரே! கல்விக்காக போராடும் நபர்கள் இங்கு இல்லை.அதனால் தான்.
சமச்சீர் கல்வியைப்பற்றி பேச ஆரம்பிக்கவே இவ்வளவு நாட்கள் / வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு கல்வியின் மீது யாருக்கு அக்கறை?

// நல்ல பதிவு நண்பரே...//

தொடர்ச்சியான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஊக்குவிப்பிற்கும் நன்றி நண்பரே!

Popular Posts